உழைப்பு, தியாகம் எதுவுமின்றி இந்த உலகத்தில் ஒருவன் எதையும் பெற்று விட முடியாது என்பதை இந்தப் பழமொழி உணர்த்துகின்றது. உண்ணுவதற்கு உணவு வேண்டுமாயின் விளைநிலத்தை உழ வேண்டும்; விதை விதைக்க வேண்டும்; நீர் பாய்ச்ச வேண்டும்; நாற்று நட வேண்டும்; இடையே முளைக்கும் களைகளைப் பறிக்க வேண்டும். பின்னர் அறுவடை செய்ய வேண்டும். களத்திற்குக் கொண்டு வந்து போரடிக்க வேண்டும். நெல்லிலிருந்து சாவிகளை அப்புறப்படுத்த வேண்டும்; உலற வைத்து உமி நீக்கிய பிறகு தான் உலை அரிசியாக வீட்டுக்கு வரும்.
இது அரிசிக்காக ஒரு மனிதன் செய்கின்ற உழைப்பாகும். அது போன்று மாங்காய் காய்க்க வேண்டுமென்றால் அதற்குத் தக்கவாறு உழைக்க வேண்டும். அதன் பின்னர் தான் மாங்காய் காய்க்கும். உழைப்பின்றி வெறுமனே மந்திரத்தின் மூலம் மாங்காய் கிடைத்து விடாது என்ற முதுமொழி இதைத் தான் உணர்த்துகின்றது. உலகக் காரியங்களுக்கு மட்டுமல்ல! மறுமைக் காரியங்களுக்கும் இது முற்றிலும் பொருந்தும். திருக்குர்ஆன் இதைத் தெளிவாகக் கூறுகின்றது.
மூஸா மற்றும் முழுமையாக நிறைவேற்றிய இப்ராஹீம் ஆகியோரின் ஏடுகளில் "ஒருவர் மற்றவரின் சுமையைச் சுமக்க மாட்டார்; மனிதனுக்கு அவன் முயற்சித்தது தவிர வேறு இல்லை'' என்று இருப்பது அவனுக்கு அறிவிக்கப்படவில்லையா? அவனது உழைப்பு (மறுமையில்) காட்டப்படும். பின்னர் முழுமையான கூலி கொடுக்கப்படுவான்.
அல்குர்ஆன் 53:36-41
உலகக் காரியங்களைப் போன்று தான் மறுமைக் காரியத்தையும் அல்லாஹ் ஆக்கி வைத்திருக்கிறான். இதற்குப் பொருத்தமாகவே ஏகத்துவத்தை ஒரு மரத்திற்கு ஒப்பாகக் கூறுகின்றான்.
நல்ல கொள்கைக்கு தூய்மையான ஒரு மரத்தை அல்லாஹ் எவ்வாறு உதாரணமாக ஆக்கியுள்ளான் என்பதை நீர் அறியவில்லையா? அம்மரத்தின் வேர் (ஆழப் பதிந்து) உறுதியாகவும், அதன் கிளை ஆகாயத்திலும் உள்ளது. தனது இறைவனின் விருப்பப்படி ஒவ்வொரு நேரமும் தனது உணவை அது வழங்குகிறது. மக்கள் படிப்பினை பெறுவதற்காக அவர்களுக்கு அல்லாஹ் உதாரணங்களைக் கூறுகிறான். தீய கொள்கைக்கு உதாரணம் கெட்ட மரம். அது பூமியின் மேற்புறத்திலிருந்து பிடுங்கப் பட்டுள்ளது; அது நிற்காது.
அல்குர்ஆன் 14:24, 25, 26
ஏகத்துவம் என்ற மாங்காய் சும்மா காய்த்து விடவில்லை. மகத்தான உழைப்பு, மாபெரும் தியாகத்தால் இந்த மரம் நாட்டப்பட்டு, ஏகத்துவம் என்ற மாங்காய் காய்த்தது.
பத்ரு, உஹத் என்ற பல போர்களில் நபித்தோழர்களின் இரத்தம் நீராகப் பாய்ச்சப்பட்டு, அவர்களின் உடல்கள் உரமாகப் போடப்பட்டு இந்த மரம் நாட்டப்பட்டது. இது வெறுமனே வளர்ந்து விடவில்லை. மக்கள் தங்கள் உழைப்பைப் பயன்படுத்தினால் தான் இந்த மார்க்கம் வளரும்.
அல்லாஹ்வின் மார்க்கம் தானே! அவன் ஆற்றல் மிக்கவன்; அதை அவன் தானாக முளைக்கச் செய்து விடுவான் என்பது கிடையாது.
தம்மிடம் உள்ளதை ஒரு சமுதாயம் மாற்றிக் கொள்ளாத வரை அச்சமுதாயத்தில் உள்ளதை அல்லாஹ் மாற்ற மாட்டான்
அல்குர்ஆன் 13:11
இவ்வாறு விதியை அல்லாஹ் நிர்ணயித்து விட்டான்.
ஓர் ஊரில் மூன்று பேர் தான் ஏகத்துவவாதிகள் என்றால் அந்த மூன்று பேரும் மற்ற மக்களிடம் ஏகத்துவத்தை எடுத்துச் சொல்லியாக வேண்டும். தவ்ஹீது தானாக முளைத்து விடும் என்று அவர்கள் வெறுமனே இருந்து விடக் கூடாது. மூலையில் முடங்கிக் கிடந்து விடக் கூடாது.
அவர்கள் தங்களால் ஆன முயற்சிகள் அனைத்தையும் செய்ய வேண்டும். அவ்வாறு முயற்சிகள் மேற்கொள்ளும் போது அல்லாஹ் அவர்களுடன் இருக்கிறான்.
இப்ராஹீம் (அலை) அவர்கள் தனியாளாக நின்று இந்த ஏகத்துவத்தை நிலைநாட்ட முயற்சி செய்த போது, அல்லாஹ் அவரை ஒரு சமுதாயமாக்கி அவருக்கு உதவிகள் புரிந்தான்.
எனவே அல்லாஹ்வின் மார்க்கத்திற்காக உழைக்க மக்கள் முன்வர வேண்டும். உழைக்கா விட்டால் இந்த மார்க்கம் வளராது.
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவினால் அவன் உங்களுக்கு உதவுவான். உங்கள் பாதங்களை அவன் உறுதிப்படுத்துவான்.
அல்குர்ஆன் 47:7
அல்லாஹ் மக்களிடம் உதவி கேட்கிறான் என்று இந்த வசனத்தில் கூறப்படுவது அவன் இயலாமையினால் உதவி கேட்கிறான் என்ற கருத்தில் இல்லை.
இந்த மார்க்கத்திற்காக மக்களை உழைக்கச் சொல்கிறான் என்பது தான் அதன் கருத்து. அவ்வாறு உழைத்தால் இந்த மார்க்கத்தை வளர்ப்பேன் என்று அல்லாஹ் கூறுகின்றான்.
அல்லாஹ் கூறுவது போன்று அவனது தூதர் (ஸல்) அவர்களும், தோழர்களும் உழைத்தார்கள். அவ்வாறு உழைத்த போது அல்லாஹ் தனது வாக்குறுதியை நிறைவேற்றினான். அவனது உதவியினால் இந்த மார்க்கத்தை வளர்ந்தோங்கச் செய்தான்.
அல்லாஹ்வின் உதவியும், வெற்றியும் வரும் போது, (முஹம்மதே!) அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் காணும் போது, உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக! அவனிடம் மன்னிப்புத் தேடுவீராக! அவன் மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான்.
அல்குர்ஆன் 110வது அத்தியாயம்
நபித்தோழர்களைப் போன்று நாம் உழைக்கவில்லை. தியாகம் செய்திடவில்லை. ஆனாலும் நாம் செய்த ஒரு சிறிய, மிக அற்பமான உழைப்பின் மூலம் இன்று மக்கள் அணியணியாக தவ்ஹீதுக்கு வருகிறார்கள். அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!
இன்னும் கொஞ்சம் அதிகமாக உழைத்தால் அல்லாஹ்வின் உதவியும் மிதமிஞ்சிக் கிடைக்கும்.
நன்றி
ஏகத்துவம்
No comments:
Post a Comment